மும்பை : இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான தோனி மற்றும் இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்து கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா களமிறங்கும் 250வது போட்டி இதுவாகும். இதனால் பலரும் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த சீசனில் ரோகித் சர்மா அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா ஒரு சதம் உட்பட 261 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்த நிலையில் கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இணைந்து நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அதில் ஐபிஎல் தொடர் குறித்த விவாதத்தின் போது தோனியை பற்றிய பேச்சுகள் வந்தது. அப்போது, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கும் போது தோனி களமிறங்கினார். அந்த 4 பந்துகளில் 20 ரன்களை விளாசி சென்றார்.
கடைசியில் பார்க்கும் போது தோனி சேர்த்த அந்த 20 ரன்கள் தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தது. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அண்மை காலங்களில் அதிகமாக கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்.
தோனியை சமாதானப்படுத்துவதை விடவும் தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்வது எளிது. கடந்த 2 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எந்த அணியின் கேப்டன் என்று தெரியவில்லை. தினேஷ் கார்த்திக்கிடம் டி20 உலகக்கோப்பையில் விளையாட விருப்பமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு தினேஷ் கார்த்திக், எனது ஆட்டமே பதில் என்று கூறி இருக்கிறார்.
அதேபோல் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தான் என்னை சிரிக்க வைக்கும் ஒரே வீரர். அவர் விபத்தில் சிக்கிய பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தது சோகமளித்தது. தற்போது மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனக்கு நன்றாக சிரிக்க வேண்டும் என்று தோன்றினால், உடனடியாக அவருக்கு போன் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.