சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அன்னிய மண்ணில் தங்களுடைய முதல் வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி சென்னை மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அந்நிய மண்ணில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியும் இருந்தது.
இந்த நிலையில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சிஎஸ்கே அணி எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே அணி 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவர்களுடைய ரன் ரேட் சிறிய அளவில் உயர்ந்து இருக்கிறது. சிஎஸ்கே வின் ரன் ரேட் 0.72 என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஆனால் கே கே ஆர் அணி ரன்ரேட் 1.68 என்ற அளவில் இருக்கிறது. சிஎஸ்கே அணியும் 8 புள்ளிகளை பெற்று இருக்கும் நிலையில் ரன் ரை
ரேட் அவர்களை விட குறைவாக இருப்பதால் மூன்றாவது இடத்திலே நீடிக்கிறது. நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. அவர்கள் மூன்று வெற்றி இரண்டு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் இருக்கும் லக்னோ அணி மூன்று வெற்றி மூன்று தோல்வி என ஆறு புள்ளிகளுடன் உள்ளனர்.
ஆறாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணி மூன்று வெற்றி, மூன்று தோல்வி என ஆறு புள்ளிகளுடன் உள்ளது. பஞ்சாப் அணி இரண்டு வெற்றி நான்கு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு வெற்றி நான்கு தோல்வி என நான்கு புள்ளிகள் மற்றும் ரன்ரேட் மைனஸ் 0.23 என்ற நிலையில் எட்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லி அணியும் இரண்டு வெற்றி நான்கு தோல்வி என 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி இருப்பதிலேயே இக்கட்டான நிலையில் இருக்கிறது. அவர்கள் 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் இருக்கின்றார்கள்.