பெங்களூரு: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி தரப்பில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ஏலத்திற்கு பங்கேற்கும் நடைமுறை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைத்து அணிகளும் நாளை மாலைக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அனைத்து அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்கவும் அனைத்து அணிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஏனென்றால் ஏலத்திற்கு வந்தால் ஒரு வீரரின் விலையை எதிரணிகள் இணைந்து மொத்தமாக ஏற்றிவிட்டுவிடுவார்கள்.
இதன் காரணமாக ஏற்கனவே ரொமாரியோ ஷெப்பர்ட், ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு இடம்பெயர்வதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் விடுவிக்கப்படும் வீரர்களையும் அனைத்து அணிகள் தயார் செய்துவிட்டன.
அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஆர்சிபி அணி, இம்முறை ஏராளமான வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்களை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதேபோல் ஹர்சல் படேல், ஃபின் ஆலன், சித்தார்த் கவுல், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா உள்ளிட்டோரை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக இந்திய இளம் வீரர்களை தேடி பிடிக்க ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ப வீரர்களையும், ஹிட்டர்களையும் தேடி பிடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.