பெங்களூரு: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் போது ஆர்சிபி அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரையும் வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்திற்காக அனைத்து அணிகளும் ஏராளமான வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் ஆர்சிபி அணி தரப்பில் ஹசரங்கா, ஹர்சல் படேல், ஹேசல்வுட், ஃபின் ஆலன், பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெயின் பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாவத் உள்ளிட்ட வீரர்களை விடுவித்துள்ளது.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களை மட்டும் தக்க வைத்து கொண்டு சிராஜை தவிர்த்து அத்தனை பவுலர்களையும் ஆர்சிபி விடுவித்துள்ளது. அதேபோல் மயங்க் டாகர் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரை ட்ரேடிங் முறையில் வாங்கியுள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணியின் கையிருப்பில் மொத்தமாக ரூ. 23.25 கோடி உள்ளது.
இந்த தொகை மூலமாக 8 வீரர்களை ஆர்சிபி அணி வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதில் 3 வெளிநாட்டு வீரர்களையும், பேக் அப் வீரர்களையும் வாங்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் இந்திய பவுலர்கள், ஸ்பின்னர்கள் என்று ஆர்சிபி அணி நிர்வாகம் தீவிரம் காட்டும் என்று பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெங்களூரு மைதானத்தில் சிறப்பாக செயல்பட கூடிய ஸ்பின்னர்களையும் வாங்க ஆர்வம் காட்டும்.
அந்த வகையில் ஏற்கனவே 2 சீசன்களில் ஆர்சிபி அணிக்காக ஆடிய ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க்கை வாங்க ஆர்சிபி அணி முயற்சிக்கும். அதேபோல் ஹசரங்காவுக்கு பதிலாக இலங்கை அணியின் வெல்லாலகே, ஆஃப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்களில் மீண்டும் ஹர்சல் படேலை குறைந்த தொகைக்கு வாங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இம்பேக்ட் வீரர்களுக்கும் ஆர்சிபி அணி திட்டத்துடன் களமிறங்கும். அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் டேட்டா மீது அதிக நம்பிக்கை கொண்டவர் என்பதால், நிச்சயம் ஆர்சிபி அணி சிறப்பான வீரர்களை வாங்க முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது.