அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் 8 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ராஜஸ்தான் அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணியின் போல்ட்-ஐ மட்டும் கவனமாக எதிர்கொண்ட விராட் கோலி, மற்ற பவுலர்களை பொளந்து கட்டினார். குறிப்பாக சந்தீப் சர்மா, ஆவேஷ் கான் இருவரின் பவுலிங்கிலும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார் விராட் கோலி.
இந்த நிலையில் சந்தீப் சர்மா பவுலிங்கில் அசத்தலாக ஒரு பவுண்டரியை விளாசிய விராட் கோலி, 18 பந்துகளில் 29 ரன்களை சேர்த்திருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 8 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 252 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8 சதங்கள், 55 அரைசதங்கள் உட்பட 8 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்கள், 6 ஆயிரம் ரன்கள், 7 ஆயிரம் ரன்கள் ஆகியவற்றை எட்டிய முதல் வீரரும் விராட் கோலி தான். அதேபோல் அதிக ரன்கள் விளாசிய வீரர்களுக்கான பட்டியலில் 2வது இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்களுடன் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 6,628 ரன்களுடன் 3வது இடத்திலும், டேவிட் வார்னர் 6,565 ரன்களுடன் 4வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 5,528 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.