மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தாரக மந்திரமே திறமையும் வாய்ப்பும் இணைந்து இடம் என்பதுதான். அப்படி திறமையான இளம் வீரர் என பெயர் பெற்ற ரியான் பராக், தன்னுடைய சேட்டையால் ரசிகர்களிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக நிதி வாங்கினார்.
திறமை இருந்தும் தன்னுடைய வாய்க்கொழுப்பால் ரசிகர்களிடம் அராத்து பையன் என பெயர் வாங்கிய ரியான் பராக், தற்போது ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இரண்டு அரை சதம் அடித்த ரியான் பராக் தற்போது ஆரஞ்சு நிறத் தொப்பியையும் வென்றிருக்கிறார்.

கடந்த சீசனில் மொத்தமாகவே கிட்டத்தட்ட 80 ரன்கள் தான் ரியான் பராக் அடித்திருந்தார். ஆனால் இந்தத் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரியான் பராக், நான் செய்யும் விஷயங்களை எளிதாக்கி கொண்டேன். முன்பெல்லாம் பல விஷயங்கள் குறித்து முயற்சி செய்வேன்.
அதை விட்டுவிட்டு அனைத்தையும் சிம்பிளாக செய்ய முயற்சி செய்கிறேன். முன்பெல்லாம் நான் சரியாக ரன்கள் சேர்க்காத போது என்ன செய்ய வேண்டும் என்று தேவையில்லாதது குறித்து எல்லாம் யோசித்து முயற்சி செய்வேன். ஆனால் இந்த ஆண்டு பந்தை பார்த்து நான் அடித்து ரன்களை சேர்க்கிறேன். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் போது இதே போன்ற சூழலில் தான் பேட்டிங் செய்ய களத்திற்கு வருவேன்.
இன்றைய ஆட்டத்தில் கூட ஜாஸ் பட்லர் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஆட்டம் நடந்த பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் நாம் இதுபோன்ற சூழலில் தானே விளையாடினோம். அதேபோல் இப்போதும் நினைத்துக் கொள்வோம் என்று மனதளவில் என்னை நான் மாற்றிக் கொண்டேன். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நான் சரியாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
இப்படி மோசமாக விளையாடிவிட்டு ஹோட்டல் ரூமுக்கு செல்லும் போது நமக்கு திறமை இருந்தும் நம்மால் ரன்கள் சேர்க்க முடியும் என இது தெரிந்தும். நாம் ஏன் சரியாக செயல்படுவதில்லை என்பது குறித்து யோசித்தேன். நாம் எப்போதெல்லாம் தவறு செய்கின்றோமோ, அப்போதெல்லாம் நாம் என்ன செய்தால் மீண்டு எழுவோம் என்பது குறித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும். என்னுடைய விஷயத்தில் நான் சரியான முறையில் பயிற்சி செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஐ பி எல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு நாம் விளையாட வேண்டும் என்றால் கடும் உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். எனவே கடந்த ஒரு ஆண்டாக கடும் பயிற்சி செய்தேன் இது போன்ற வேகமான பந்துகளை எப்படி ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். இது போன்ற கடினமான சூழ்நிலையில் பேட்டிங் செய்து எப்படி நம்முடைய செயல்பாட்டை மெருகேற்ற வேண்டும் என்பது குறித்து பயிற்சி செய்தேன் என்று ரியான் பராக் கூறியுள்ளார்.