அகமதாபாத் : குஜராத் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை வென்றும், 2வது சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆனால் இந்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு தாவியதால், குஜராத் அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதேபோல் குஜராத் அணியின் முக்கிய பவுலராக இருந்த முகமது ஷமியும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 6 மாதங்களாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இரு முக்கிய நட்சத்திர வீரர்களை குஜராத் அணி எப்படி நிரப்பும் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் ஏலத்தில் ஷாரூக் கான், ஸ்பென்சர் ஜான்சன், ஒமர்சாய் உள்ளிட்டோரை வாங்கி அசத்தியது.
இருப்பினும் முகமது ஷமிக்கான மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யாமலேயே குஜராத் அணி இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்வதாக குஜராத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை மும்பை அணியில் பும்ரா இல்லாத போது, அவருக்கான மாற்று வீரராக சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கனவே பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்காகவும் சந்தீப் வாரியர் விளையாடி இருக்கிறார். இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே சந்தீப் வாரியர் விளையாடி இருக்கும் சூழலில், இந்த சீசனில் குஜராத் அணி தரப்பில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸ்விங் பிட்சிகளில் சந்தீப் வாரியர் கில்லியாக செயல்பட கூடியவர். ரஞ்சி டிராபி தொடரிலேயே தமிழ்நாடு அணிக்காக அட்டகாசமாக செயல்பட்டார் சந்தீப் வாரியர்.
அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியில் இணைந்துள்ள 5வது தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர். ஏற்கனவே விஜய் சங்கர், சாய் கிஷோர், ஷாரூக் கான் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுடன் சந்தீப் வாரியரும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் பலரும் அணியின் பெயரை குஜராத் டைட்டன்ஸ் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு டைட்டன்ஸ் என்று மாற்றிவிடலாம் என்று கருத்து கூறி வருகின்றனர்.