ஐதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவுடன் பேசியது எனது நம்பிக்கையை அதிகரித்ததாக ஐதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியின் ஆட்டத்தை 3ஆக பிரிக்கலாம். முதல் 7 ஓவர்களில் ட்ராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவம் விளையாடினால், 7 முதல் 13 ஓவர்கள் வரை அபிஷேக் சர்மாவும், கடைசி 7 ஓவர்களில் கிளாசனும் பொளந்து கட்டினார்கள்.

ட்ராவிஸ் ஹெட் கொடுத்த அதிரடி தொடக்கத்தை கொஞ்சம் கூட குறைக்காமல் அப்படியே அபிஷேக் சர்மா விளையாடி, தரமான ஃபினிஷிங் செய்ய கிளாசன் கைகளில் ஆட்டத்தை கொடுத்தார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 63 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்காக 16 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய சாதனையையும் படைத்தார். இதனால் அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட பின் அபிஷேக் சர்மா பேசுகையில், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான சையத் முஷ்டாக் அலி போட்டிகளில் விளையாடியதன் மூலமாக எனது ஆட்டத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. எங்கள் அணி நிர்வாகிகள் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. உங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்படியே விளையாடுங்கள் என்று கூறினார்கள். அதனால் எனது திட்டம் அட்டாக் செய்வதாக மட்டுமே இருந்தது.
ட்ராவிஸ் ஹெட்டுடன் இணைந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன்களில் ட்ராவிஸ் ஹெட்டும் ஒருவர். அவர் என்னிடம், உன்னுடைய ஜோனில் இருந்தால் தாராளமாக அட்டாக் செய்ய வேண்டும் என்று கூறினார். அதனை தான் செய்தேன். அதேபோல் என்னை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் பிரச்சனையில்லை. தொடக்க வீரர், நம்பர் 3 என்று எந்த பேட்டிங் வரிசையிலும் வந்தாலும் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருக்கிறேன்.
முந்தைய நாள் இரவு எங்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரையன் லாராவுடன் பேசினேன். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது. அதேபோல் வலைப்பயிற்சிகளில் பேட்டிங்கை விடவும் பவுலிங் பயிற்சியில் அதிகமாக ஈடுபட்டு வருகிறேன். பவுலிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும். பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அதனை கைவிடும் மனநிலை எப்போதும் இல்லை என்று தெரிவித்தார்.