SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் எடுத்த தவறான முடிவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் திலக் வர்மா 34 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 64 ரன்களியும், டிம் டேவிட் 22 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 42 ரன்களையும் சேர்த்தனர்.
இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைய ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஒரு காரணமாக இருந்தாலும், களத்தில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகளே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 148 ரன்களை விளாசியது. இந்த 10 ஓவர்களில் பும்ரா வீசிய ஒரு ஓவரில் மட்டும் 5 ரன்கள் சேர்க்கப்பட்டன.
இதன்பின் கிளாசனை கட்டுப்படுத்த பும்ராவின் ஓவர்கள் தேவை என்ற திட்டத்துடன் மும்பை அணி செயல்பட்டது. ஆனால் கிளாசன் வருவதற்கு முன்பாகவே ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் மும்பை அணியை பொளந்துவிட்டனர். கேப்டனாக இருப்பவர், சூழலுக்கு தகுந்தபடி சில முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத போது, ஆட்டம் கைகளை விட்டு போவதை யாராலும் தடுக்க முடியாது.
டிராவிஸ் ஹெட் போன்ற வீரர் சில ஷாட்களை விளாசி செட்டிலாகிவிட்டால், அவர்களை கட்டுப்படுத்துவது சாதாரணமாக இருக்காது. இதனால் முதல் ஓவரிலேயே பும்ராவிடம் பந்தை கொடுத்து ஹர்திக் பாண்டியா சோதனை செய்திருக்க வேண்டும். ஷார்ட் பாலில் அடித்தால், யார்க்கர் போடலாம் என்று சிந்தித்த பாண்டியா, கோட்டைவிட்டது முதல் ஓவரில் தான். அதேபோல் ஸ்விங்காக கூடிய மைதானத்தில் மட்டும் பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யும் திட்டத்துடன் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications