ஐதராபாத் : 17 ஆண்டு கால ஐபிஎல் தொடர் வரலாற்றில், பவர் பிளேவில் முதல்முறையாக 81 ரன்களை குவித்து ஐதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை அணி தரப்பில் 17 வயதேயான மபாகா அறிமுகம் செய்யப்படுவதாகவும், ஐதராபாத் அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐதராபாத் அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் - மயங்க் அகர்வால் கூட்டணி களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்க, தொடர்ந்து ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 17 வயதேயான இளம் வீரர் மபாகா பவுலிங்கில் டிராவிஸ் ஹெட் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்து அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை விளாசி தள்ளினார்.
அதுமட்டுமல்லாமல் மீண்டும் அட்டாக்கில் வந்த ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, கோட்சியே வீசிய 6வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 23 ரன்கள் சேர்க்கப்பட்டது. பவர் பிளே ஓவர்களின் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் 17 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் ஐதராபாத் அணி குவித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் 7 ஓவர்கள் முடிவில் 102 ரன்களை குவித்த ஐதராபாத் அணி, 8வது ஓவரின் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 117 ரன்களாக உயர்ந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே 8 ஓவர்களில் எந்த அணியும் 117 ரன்கள் குவித்ததில்லை. இதன் மூலமாக ஐதராபாத் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார். தொடர்ந்து 10 ஓவர்களில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 148 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 10 ஓவர்களில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற பெருமையை ஐதராபாத் அணி பெற்றுள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.