IPL 2024 : சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்.. சூர்யகுமார் யாதவ் ட்விஸ்ட்.. மும்பை இந்தியன்ஸ் மீது அதிருப்தி
சென்னை : சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர் அடுத்த ஐபிஎல் ஏலத்துக்கு முன் அந்த அணியால் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின் அவர் வேறு ஐபிஎல் அணிக்கு மாறக் கூடும் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக தகவல்கள் வலம் வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் செயல்பட்டு வந்தது. அவருக்கு அடுத்ததாக அணியை வழிநடத்தக் கூடிய வீரர்களாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கருதப்பட்டனர். 2022 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, தனக்கு கேப்டன் பதவி அளித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார்.

அதனால் அப்போது ரோஹித் சர்மாவுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவுக்கு தான் கிடைக்கும் என கூறப்பட்டது. அணி நிர்வாகத்திலும் இந்த முடிவு பேசப்பட்டு இருக்கக் கூடும். அதன் விளைவாக, ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய போதும், ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு பாண்டியாவை கேப்டனாக அறிவித்த போதும் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக சமூக ஊடகங்களில் காட்டினர்.
2024 ஐபிஎல் தொடரில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், அதன் பின் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர்கள் மும்பை அணியால் தக்க வைக்கப்படும் நான்கு வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியால் அடையாளம் காணப்பட்டு, பயிற்சி தரப்பட்டு, இன்று இந்திய அணியில் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக வளர்ந்து இருக்கிறார். எனவே, என்னதான் அதிருப்தி இருந்தாலும் தன்னை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் விசுவாசமாக இருப்பார் என தெரிகிறது.
ஆனால், சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியவர். மேலும், அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இனி அவர் கேப்டன் பதவியை நோக்கி காய் நகர்த்துவது தேவை இல்லாத ஒன்று. அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணி தன்னை ஏமாற்றியதாக அவர் கருதும் நிலையில் அவர் 2025 ஐபிஎல் ஏலத்தின் போது விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
IPL 2024 : இந்திய அணிக்கு ரோஹித் கேப்டன் இல்லை? மும்பை இந்தியன்ஸ் பதிவால் ரசிகர்கள் கொதிப்பு
அப்படி நடந்தால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என எதிர்பார்க்கலாம். அவரும் சிஎஸ்கே போன்ற வீரர்களை மதிக்கும் அணியைத் தான் இனி விரும்புவார். ஆனால், உலகின் நம்பர் 1 டி20 வீரரான சூர்யகுமார் யாதவ் ஏலத்தில் இடம் பெற்றால் அவரை வாங்க கடும் போட்டி இருக்கும். அதற்கு நடுவே போட்டி போட்டுத் தான் சிஎஸ்கே அணி அவரை வாங்க வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications