லக்னோ: முன்னாள் சிஎஸ்கே வீரரான ஷர்துல் தாக்கூரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்காத நிலையில், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை இரு கரம் கூப்பி "அட்வான்ஸ் புக்கிங்" செய்து அழைத்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்ப்பதற்கு லக்னோ நிர்வாகம் பிசிசிஐயிடம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வாங்கவில்லை. ஆனாலும், தற்போது ஷர்துல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அளவுக்கு லக்னோ அணி மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மூன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடரில் பங்கேற்பார்களா, இல்லையா? எனத் தெரியாத சூழ்நிலை உள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹ்சின் கான், ஆவேஷ் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி சான்று ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் காயத்தில் சிக்கி இருந்தனர். எனவே, தேசிய கிரிக்கெட் அகாடமி அவர்கள் முழு உடற்தகுதியைப் பெற்றுவிட்டதாக மருத்துவ அறிக்கை அளித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் அவர்கள் விளையாட முடியும். அந்த மூவரில் மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், அது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. காயம் மோசமாக இருப்பதால் மயங்க் யாதவால் நிச்சயமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக மாற்று வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைத் தேர்வு செய்ய முடிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் ஷர்துல் தாக்கூரைத் தேர்வு செய்து இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடர் வரை ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து இருந்தார். ஆனால், 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதனால் மன வருத்தத்தில் இருந்த ஷர்துல் தாக்கூர் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
2024 சையது முஸ்தாக் அலி டிராபி தொடரில் 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சில போட்டிகளில் அதிரடியாக ரன் சேர்த்தார். அடுத்து ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் மும்பை அணிக்காக 9 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி அதிக ரன்களைச் சேர்த்தார்.
இதை அடுத்து அவருக்கு தற்போது வாய்ப்பு தேடி வந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மயங்க் யாதவ் அல்லது வேறு வேகப்பந்து வீச்சாளர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அவர்களுக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூரை அறிவிக்க முடியும். எனினும், அதுபோன்ற சூழல் இருப்பதை உணர்ந்துதான் லக்னோ அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.