மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதனால் பும்ராவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளை கடந்து 3வது இடத்திற்கு மும்பை அணி முன்னேறி இருக்கிறது.

இதனால் 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவின் வரவே காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பும்ராவின் 4 ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க முடியாது என்பதால், மற்றவர்களை அட்டாக் செய்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் பும்ரா தனது 300வது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். 237 இன்னிங்ஸ்களில் பும்ரா இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த சாதனையை படைத்த 2வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான். இதற்கு முன்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். அவர் இதுவரை 302 இன்னிங்ஸ்களில் 318 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் ஸ்பின்னர்களில் அஸ்வின், பியூஷ் சாவ்லா, சாஹல் ஆகியோர் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் பும்ரா, இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். காயத்திற்கு பின் கம்பேக் கொடுத்துள்ள பும்ரா, இன்னும் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் பும்ரா ஃபார்முக்கு வரும் பட்சத்தில், மும்பை அணி கோப்பையை வெல்வது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.