மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பு 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஸ்டார் வீரர்கள் இருப்பதால் யாருக்கு எவ்வளவு சம்பளத்தை கொடுப்பது என்ற குழப்பத்தில் அம்பானி குடும்பம் இருந்தது.
இதனால் சூரியகுமார், ரோகித் சர்மா ஆகியோர் மும்பை அணியில் இருந்து வெளியேற நினைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அம்பானி குடும்பத்தினர் தங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வீரர்களுக்கு சம்பளத்தை பிரித்து வழங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் குறைத்து கொண்டிருக்கிறார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி 18 கோடி ரூபாய்க்கு முதல் வீரராக பும்ராவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இதை அடுத்து இரண்டாவது வீரராக சூரியகுமார் யாதவுக்கு 16 கோடியே 35 லட்சம் ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சூரிய குமாரின் சம்பளம் அதிகரித்து இருக்கிறது. மூன்றாவது வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் சம்பளம் 16 கோடியே 35 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
சூரிய குமாருக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் ஒரே சம்பளம் வழங்கப்பட்டாலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட போகிறார். நான்காவது வீரராக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மாவின் சம்பளம் 16 கோடியே 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அவர் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். ஐந்தாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. திலக் வர்மாவுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. விதிப்படி திலக் வர்மாவுக்கு14 கோடி ரூபாய் வழங்கியிருக்க வேண்டும்.
இவரின் 6 கோடி ரூபாயை பிரித்து தான் மற்ற வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பிரித்து வழங்கியிருக்கிறது.இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், டிம் டேவிட் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு ஆர் டி எம் கார்டு தான் இருக்கும். இதை வைத்து அவர்கள் இஷான் கிஷன் அல்லது டிம் டேவிட் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம்.