மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா கேப்டன் ரோஹித் சர்மா நள்ளிரவு 2.30 மணிக்கு மெசேஜ் அனுப்பியது குறித்து பேசி இருக்கிறார். 2023 ஐபிஎல் தொடரின் போது நள்ளிரவு 2.30 மணிக்கு மெசேஜ் அனுப்பிய அவர், அதன் பின் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு நேரில் வந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார் பியுஷ் சாவ்லா.
2023 ஐபிஎல் தொடரின் போது எதிர் அணியின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என திட்டமிடத்தான் நள்ளிரவில் அப்படி மெசேஜ் அனுப்பி இருக்கிறார் ரோஹித் சர்மா. அது குறித்து பியுஷ் சாவ்லா வியந்து பேசி இருக்கிறார். அவர் ஒரு கேப்டன் அல்ல, ஒரு தலைவர் எனவும் அந்த சம்பவத்தை கூறி இருக்கிறார்.

அவர் 2023 ஐபிஎல் தொடரில் நடந்த அந்த சம்பவத்தை விவரித்தார். "நான் ரோஹித் சர்மா உடன் நிறைய கிரிக்கெட் ஆடி இருக்கிறேன். அதனால் எனக்கு அவருடன் ஒரு சகஜமான பழக்கம் உள்ளது. நாங்கள் ஆடுகளத்துக்கு வெளியேயும் ஒன்றாக அமர்ந்து இருப்போம். ஒரு நாள் இரவு 2.30 மணிக்கு அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். "நீ இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார். அதன் பின் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு நேரில் வந்து விட்டார். அதில் பிட்ச் மற்றும் ஃபீல்டிங் வியூகங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டேவிட் வார்னர் மற்றும் மற்றொரு பேட்ஸ்மேனின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என ஆலோசிக்க அவர் என் அறைக்கு வந்தார். அந்த நேரத்திலும் அவர் என்னிடம் இருந்து எப்படி சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவது என்பதில் தான் கவனம் செலுத்தினார்." என்றார் பியுஷ் சாவ்லா.
"கிரிக்கெட்டில் கேப்டன் என்பவர் இருக்கிறார். அதே போல தலைவர் என்பவரும் இருக்கிறார். ரோஹித் சர்மா கேப்டன் அல்ல. அவர் ஒரு தலைவர். 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 2024 டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு சூழ்நிலையை எளிதாக்க வேண்டும் என்ற கவனம் இருந்தது. அவர் உண்மையான தலைவர். உங்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளிப்பார். அவர் எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கான கேப்டன் ஆவார். நம்மை எப்போதும் நமது பாணியிலேயே இருக்க வைக்க முயற்சி செய்வார்." என்று கூறினார் பியுஷ் சாவ்லா.
டீமை விட்டே தூக்கி எறிந்து விடுவார்கள்.. ரோஹித், கோலி நிழலில் வாழும் வீரர்.. ராகுல் குறித்து அதிரடி
இந்தியாவில் இருக்கும் மூத்த சுழற் பந்துவீச்சாளரான பியுஷ் சாவ்லா 2008இல் ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஒவ்வொரு தொடரிலும் விளையாடி வருகிறார். தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். 2023 ஐபிஎல் தொடரில் பியுஷ் சாவ்லா 16 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் நான்காவது இடத்தில் இருக்கிறார் பியுஷ் சாவ்லா. பியுஷ் சாவ்லா இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடி இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.