மும்பை: கடந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் எழுந்ததாக பரவலாக பேசப்பட்டது. அந்த அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா கேப்டன் பதவியை இழந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் அவர் அந்த அணியில் இருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது அதற்கு நேர்மாறான ஒரு முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுத்து இருக்கிறது.
2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பின்னர் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும், ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த இலங்கை ஒருநாள் தொடரில் மற்ற இந்திய வீரர்கள் சொதப்பிய நிலையில் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை ஆடி இரண்டு அரைசதங்கள் அடித்து இருந்தார். தற்போது அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பல தடுமாற்றங்களை சந்தித்தது. ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் அனைத்து தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ரோஹித் சர்மா போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு வீரரை அணியை விட்டு வெளியே அனுப்புவது அந்த அணிக்கு பின்னடைவாக மட்டுமே இருக்கும்.
மேலும் ஹர்திக் பாண்டியாவும் தனிப்பட்ட வாழ்வில் அழுத்தங்களை சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் கேப்டனாக முழுவீச்சுடன் செயல்படுவாரா? என்ற சந்தேகம் உள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்ற எண்ணமும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு உள்ளது.
இதனிடையே ரோஹித் சர்மாவை அணியை விட்டு வெளியேறாமல் தக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒருவேளை ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறும் முடிவை வெளிப்படையாக கூறினால் கேப்டன் பதவியை மீண்டும் அளித்து அவரை தக்க வைக்கும் முயற்சி நடக்கும் என கூறப்படுகிறது. இதுவே மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களின் கடைசி ஆயுதமாக இருக்கும் எனவும் அந்த அணி வட்டாரத்திலிருந்து கூறப்படுகிறது.