IPL 2026: சிங்கராஜா இடத்தை பிடித்த குட்டி ஹர்திக்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே இந்த ஈகோதான்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வரும் படுதோல்விகள், அந்த அணியின் ரசிகர்களை நிலைகுலையச் செய்துள்ளது. 243 ரன்கள் எடுத்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்றது, மும்பை அணியின் பலவீனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில், மும்பை அணியின் இந்தச் சரிவுக்குக் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே காரணம் அல்ல, அந்த அணியின் வீரர்களுக்குள் நடக்கும் 'ஈகோ' மோதல்கள் தான் முக்கிய காரணம் என முன்னாள் வீரர் சைமன் டவுல் அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரையான் ரிக்கல்டன் 123 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். ஆனால், நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும், திலக் வர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதியில் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை அணியின் நிலை குறித்து சைமன் டவுல் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய சைமன் டவுல், "மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஓய்வறை தற்போது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது. அங்கு அனைவரும் 'ஆல்பா' (தலைமைப் பண்பு மிக்க) வீரர்களாக உள்ளனர். இந்திய அணியை வெவ்வேறு காலகட்டங்களில் வழிநடத்திய 4 முன்னணி வீரர்கள் (ரோஹித், சூர்யகுமார், பும்ரா, ஹர்திக்) அந்த ஒரே அறையில் உள்ளனர். முன்பு மும்பை அணி ஒரு சிங்கக் கூட்டம் போல இருந்தது, அப்போது ஹர்திக் பாண்டியா ஒரு குட்டியாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணிக்குச் சென்று அங்குத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றி பெற்றார். மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பிய அவர், இங்கிருக்கும் 'ராஜா'வின் (ரோஹித் சர்மா) இடத்தைப் பிடிக்கப் போராடியது தான் வினையாக முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சரிவுக்கு ஹர்திக் பாண்டியாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கும் முடிவை எடுத்தது அணியின் உரிமையாளர்களும், உயர் நிர்வாகமும் தான். எனவே, கடந்த 3 ஆண்டுகளாக மும்பை அணி சந்தித்து வரும் சரிவுக்கு அந்த நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். காகிதத்தில் சிறந்த அணியாகத் தெரிந்தாலும், களத்தில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லாதது தெளிவாகத் தெரிகிறது" என சைமன் டவுல் சாடியுள்ளார்.
தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது. அணியின் சீனியர் வீரர்கள் சொதப்புவதும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முடிவுகள் விமர்சனத்திற்கு உள்ளாவதும் அந்த அணியை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. 'ஈகோ' மோதல்களைத் தவிர்த்து, ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் மீண்டெழுமா?


Click it and Unblock the Notifications
