IPL 2026: பும்ராவுக்கு காயம்.. பிசிசிஐ சிறப்பு மையத்தில் பயிற்சி.. மும்பை இந்தியன்ஸ்க்கு பின்னடைவு
மும்பை: ஐபிஎல் 2026 தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவதற்கு முன், உலகக் கோப்பை நாயகன் ஜஸ்பிரித் பும்ரா பெங்களூருவில் உள்ள பிசிசிஐ திறனாய்வு மையத்திற்கு சென்றுள்ளார். அவரது வருகை காயம் சார்ந்ததா அல்லது வழக்கமான வருகையா எனத் தெரியவில்லை. பும்ராவை வெகுவாக நம்பியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது கவலை அளிக்கும் விசயமாக அமைந்துள்ளது.
40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்திறனாய்வு மையம், இந்திய கிரிக்கெட்டின் முக்கிய தளமாகும். இங்கு அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சி, உடல்தகுதி, திறனாய்வு மேற்கொள்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள், பயிற்சிகளுடன், முழுநேர பிசிசிஐ மருத்துவக் குழு செயல்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆகாஷ் தீப், முதுகு அழுத்தக் காயத்திற்காக சமீபத்தில் இங்கு சிகிச்சை பெற்றார்.

பும்ரா கடைசியாக 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டி நாயகன் விருதை வென்றார். ஆனால், வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் டெல்லியில் நடைபெற்ற பிசிசிஐயின் ஆண்டு விருதுகள் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இது அவரது உடல்நிலை குறித்து சந்தேகங்களை வலுப்படுத்தியது.
மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, உலகக் கோப்பை வென்றவர்களுக்கு நீண்ட ஓய்வு இருக்கும் என அறிவித்தார். ஆயினும், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா அணியின் 'மிக்ஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதும், பும்ரா அங்கு இல்லை. அவரது CoE வருகை ஒரு வழக்கமான பரிசோதனைக்கு அப்பாற்பட்டது என்ற ஊகங்கள் இதனால் வலுப்பெற்றன.
பும்ரா குடும்பத்துடன் ஓய்வெடுத்துவிட்டு, திறனாய்வு மையத்தில் தன்னைத் தயார்ப்படுத்துவதாக எம்ஐ அணி நம்புகிறது. ஐபிஎல் 2026 அணிக்கு அவர் மிக முக்கியமானவர். பந்துவீச்சு படையின் தலைவர் மட்டுமல்லாமல், போட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் பந்துவீசும் ஒரே வீரர். உலகக் கோப்பையில் இந்தியாவுக்காகச் செய்தது போலவே, தனியொருவராகப் போட்டிகளை வெல்லும் வீரர் ஆவார்.மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications