IPL 2026: பும்ரா செய்த அந்த ஒரு தவறு.. போட்டியின் திருப்பமே இதுதான்.. மும்பையை பந்தாடிய பஞ்சாப்!
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கு மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்த ஒரு சிறிய தவறுதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை இன்னிங்ஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்கத்திலேயே அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், தொடக்க வீரராகக் களமிறங்கிய குயின்டன் டி காக் நங்கூரம் போல நிலைத்து நின்று 112 ரன்கள் குவித்தார். இளம் வீரர் நமன் தீருடன் (50 ரன்கள்) இணைந்து அவர் 122 ரன்கள் சேர்த்ததால் மும்பை அணி வலுவான நிலைக்குத் திரும்பியது. ஆனால், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், 200 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 195 ரன்களுக்கு சுருண்டது.

பஞ்சாப் அதிரடி:
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. தீபக் சாஹர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் வீரர்கள் 21 ரன்களை விளாசினர். ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவேயாகும்.
போட்டியின் திருப்புமுனை:
இந்தப் போட்டியின் திருப்புமுனை ஆட்டத்தின் 4-வது ஓவரில் நிகழ்ந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை பிரப்சிம்ரன் சிங் கட்-ஷாட் அடிக்க, அது நேராக பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஜஸ்பிரித் பும்ராவிடம் சென்றது. மிகவும் எளிதான அந்த கேட்ச்சை பும்ரா எதிர்பாராத விதமாகக் கோட்டை விட்டார். அப்போது பிரப்சிம்ரன் சிங் வெறும் 11 ரன்களில் மட்டுமே இருந்தார். பும்ரா செய்த இந்தத் தவறு மும்பை அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பிரப்சிம்ரன் ரன் குவிப்பு:
கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரப்சிம்ரன் சிங், அதன் பிறகு மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 23 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அவருக்குப் பக்கபலமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களின் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.
இறுதியில் 16.3 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 11 ரன்களில் பிரப்சிம்ரன் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். ஆனால், பும்ரா செய்த அந்த ஒரு கேட்ச் நழுவல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியை உறுதி செய்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. மும்பை அணி தனது 4-வது தோல்வியைப் பதிவு செய்து 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.


Click it and Unblock the Notifications