3 ரன்னில் பறிபோன ரெக்கார்டு.. 18 ஆண்டுகால சாதனையை நழுவவிட்ட டி காக்.. ரோஹித் சாதனை முறியடிப்பு
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக், வான்கடே மைதானத்தை தனது அதிரடியால் அதிர வைத்தார். வெறும் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், பல வரலாற்று சாதனைகளைத் தகர்த்துள்ளார். அதே சமயம் 3 ரன்களில் ஒரு முக்கிய சாதனையை தவறவிட்டார்.
ரோஹித் சாதனை காலி
காயத்தால் விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்தப் போட்டியில் களமிறங்கிய டி காக், அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஒருவர் முதல் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2012-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 109 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை டி காக் முறியடித்துள்ளார்.

நூலிழையில் தவறிய ஜெயசூர்யாவின் சாதனை
இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சனத் ஜெயசூர்யாவின் 18 ஆண்டுகால சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூர்யா 114 ரன்கள் விளாசி இருந்தார். இந்தப் போட்டியில் டி காக் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தச் சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.
உலக அளவிலான சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் டி காக் அடிக்கும் 9-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த சர்வதேச வீரர்களின் பட்டியலில் அவர் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கிறிஸ் கெய்ல் (22), பாபர் அசாம் (11), டேவிட் வார்னர் (10) ஆகியோர் மட்டுமே இவருக்கு முன்னால் உள்ளனர். விராட் கோலியும் 9 சதங்களுடன் இவருடன் சமநிலையில் உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்:
ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக (டெல்லி, லக்னோ, மும்பை) சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற அரிய சாதனையை டி காக் இன்று படைத்தார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
வான்கடே மைதானத்தில் மும்பை அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, இளம் வீரர் நமன் தீருடன் இணைந்து 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு டி காக் கொண்டு சென்றார். பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த டி காக்கின் இந்த ஆட்டம், மும்பை அணிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
எனினும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்காததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் எல்லாம் சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications