IPL 2026: “ஹர்திக் பாண்டியா இல்லைனா MI வீரர்கள் ரொம்ப நிம்மதியா இருக்காங்க”.. ஸ்ரீகாந்த் பேச்சு
தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் காட்டிய அதீத உற்சாகமும், ஒற்றுமையும் தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்குக் காரணம் அந்தப் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாதது தான் என்று முன்னாள் இந்திய கேப்டனும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அதாவது கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாததால் அந்த அணியின் வீரர்கள் இயல்பாக, நிம்மதியாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
தரம்சாலாவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் ஜஸ்பிரித் பும்ரா தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்றார். பந்துவீச்சில் பும்ரா செய்த சாதுர்யமான மாற்றங்களால் பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை நிலைகுலையச் செய்தது. குறிப்பாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றியைச் சுவைத்தது. இந்த வெற்றியை டக்-அவுட்டில் இருந்த ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அணியில் மாற்றம் இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது மட்டும் உறுதி. ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாத போது, வீரர்களின் மனநிலை மிகவும் லேசாக இருப்பதை உணர முடிந்தது. ஒட்டுமொத்த அணியும் திடீரென மிகவும் ஒற்றுமையாகக் காணப்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்ற வெறி வீரர்களிடம் அப்பட்டமாகத் தெரிந்தது" என்று கூறியுள்ளார்.
பும்ராவின் மேஜிக் மேலும் பும்ராவின் தலைமை குறித்துப் பாராட்டிய ஸ்ரீகாந்த், "பும்ராவை கேப்டனாக நியமித்தது மிகச்சிறந்த முடிவு. அவர் மைதானத்தில் தொடர்ந்து புன்னகையுடனே காணப்பட்டார். இது தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. அவர்கள் ரன்களை வாரி வழங்காமல் விக்கெட்டுகளை வீழ்த்த பும்ராவின் அணுகுமுறை தான் காரணம். ஹர்திக் இல்லாதபோது நிலவிய அந்த பாசிட்டிவ் எனர்ஜி தான் மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது" எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஸ்ரீகாந்தின் இந்தக் கருத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஹர்திக் பாண்டியா அணியிலிருந்து நீக்கப்படுவார் அல்லது கேப்டன் பதவியை இழப்பார் என்ற வதந்திகளை ஷர்துல் தாகூர் மறுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications