IPL 2026: டிராவிஸ் ஹெட் திடீரென ஆடிய ஆட்டம்.. ‘ஸ்டன்’ ஆன அம்பானி குடும்பம்.. எதிர்பார்க்காத MI
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த பிறகு, எந்த ஒரு அணியும் தோல்வியைச் சந்திக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேர்ந்துள்ளது. குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கை தொடங்கிய உடன் டிராவிஸ் ஹெட் ஆடிய விதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் நீடா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியை உறைய வைத்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரையான் ரிக்கல்டன் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். சனத் ஜெயசூர்யாவின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். 243 ரன்கள் எடுத்த நிலையில், மும்பைஇந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் நம்பினர். மைதானத்தில் இருந்த நீடா அம்பானியும், ஆகாஷ் அம்பானியும் உற்சாகமாகத் தனது அணியை கைதட்டி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆடிய ஆட்டம் மும்பை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளைக் கூட அவர் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார். வெறும் 30 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் விளாசி, மும்பையின் வெற்றிக் கனவை ஆரம்பத்திலேயே சிதைத்தார்.
டிராவிஸ் ஹெட்டின் இந்த அதிரடி பேட்டிங்கைப் பார்த்த நீடா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி, ஆரம்பத்திலேயே தங்கள் நம்பிக்கையை இழந்தவர்களாக காணப்பட்டனர். டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஹைதராபாத் அணியை 18.4 ஓவர்களிலேயே வெற்றிபெறச் செய்தார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications