IPL 2026: ஐபிஎல் இறுதிப் போட்டி திடீர் மாற்றம்.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. எங்கே நடக்கிறது தெரியுமா?
மும்பை: 2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி, தற்போது அங்கிருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி எங்கே நடக்கும், பிளே ஆப் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறவுள்ளன என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2026 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்தது. 70 லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான நான்கு பிளே ஆஃப் போட்டிகள் மே மாத இறுதியில் நடைபெறவுள்ளன. அதன்படி, மே 26 அன்று தர்மசாலாவில் உள்ள எச்பிசிஏ மைதானத்தில் குவாலிபையர் 1 போட்டி நடைபெறும். இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் பலப்பரீட்சை நடத்தும்.

இதனைத் தொடர்ந்து, மே 27 அன்று எலிமினேட்டர் போட்டியும், மே 29 அன்று குவாலிபையர் 2 போட்டியும் சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு மைதானங்களுமே பிளே ஆப் போட்டிகளை நடத்துவது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2026 ஐபிஎல் இறுதிப் போட்டி மே 31 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு இந்த மெகா இறுதிப் போட்டி அரங்கேற உள்ளது. உண்மையில், இந்த இறுதிப் போட்டியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்தவே பிசிசிஐ முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், பெங்களூரு கிரிக்கெட் சங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து வந்த சில செயல்பாட்டு நிபந்தனைகள் பிசிசிஐ-யின் விதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால், வேறு வழியின்றி இறுதிப் போட்டியை அகமதாபாத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 பிளே ஆப் அட்டவணை:
மே 26 - குவாலிபையர் 1: தர்மசாலா
மே 27 - எலிமினேட்டர்: சண்டிகர்
மே 29 - குவாலிபையர் 2: சண்டிகர்
மே 31 - இறுதிப் போட்டி: அகமதாபாத்
போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த முறை பிளே ஆப் போட்டிகள் 3 வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகின்றன. பெங்களூரு ரசிகர்கள் தங்களது சொந்த மண்ணில் இறுதிப் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பை இழந்தது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இருப்பினும், இமயமலை அடிவாரத்தில் உள்ள தர்மசாலா மற்றும் நவீன வசதிகள் கொண்ட சண்டிகர் மைதானங்களில் பிளே ஆப் போட்டிகள் நடப்பது தொடருக்கு ஒரு புதிய பொலிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே அகமதாபாத்தில் பலத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications