“விடைபெறுகிறேன்”.. 16 ஆண்டுகளுக்கு பின் மும்பை இந்தியன்ஸ்-இல் இருந்து முன்னாள் இந்திய வீரர் விலகல்
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடந்த 16 ஆண்டுகளாகப் பயணித்த முன்னாள் இந்திய வீரர், தற்போது அந்த அணியை விட்டு மொத்தமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ராபின் சிங், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடனான தனது நீண்டகால உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2010 முதல் அந்த அணியின் ஒரு அங்கமாக இருந்த இவர், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐக்கிய அரபு அமீரக லீக் தொடர் (ILT20) அணியான 'எம்ஐ எமிரேட்ஸ்' -இல் இருந்தும் விடைபெற்றுள்ளார். கடந்த 2010 முதல் 2012 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராபின் சிங் சிறப்பாகப் பணியாற்றினார். அதன் பிறகு ஜான் ரைட் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற போதிலும், ராபின் சிங் அணியின் ஆலோசகராகவும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் நீடித்தார்.

கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் பணிகளில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற சர்வதேச அணிகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தனது இந்த நெடிய பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராபின் சிங், "மும்பை இந்தியன்ஸ் அணியுடனான எனது பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2010-ம் ஆண்டு முதல் எனக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 136 ஒருநாள் போட்டிகளிலும், 1 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ள ராபின் சிங், ஒருநாள் போட்டிகளில் 2336 ரன்களையும் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மிகச்சிறந்த பீல்டராக அறியப்பட்ட இவர், பணி ஓய்வுக்குப் பின் உலகெங்கும் உள்ள பல்வேறு லீக் தொடர்களில் பயிற்சியாளராக முத்திரை பதித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என இவரது பயிற்சியாளர் அனுபவம் மிகவும் விரிவானது.
மேலும், ஐக்கிய அரபு அமீரக தேசிய அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவரான ராபின் சிங்கின் இந்த விலகல், அந்த அணிக்கு ஒரு முக்கிய இழப்பாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
