IPL 2026: “இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது”.. பும்ராவை லைவ் மேட்சிலேயே வெளுத்து வாங்கிய கவாஸ்கர்
மும்பை: உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் கொண்டாடப்படும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை, ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நேரலையிலேயே மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என கவாஸ்கர் கொந்தளித்து பேசி இருக்கிறார்.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவின் ஃபார்ம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை பந்துவீச்சில் மிரட்டி வந்த பும்ரா, நடப்பு சீசனில் தனது பழைய வேகத்தையும் துல்லியத்தையும் இழந்து தடுமாறி வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு ஒரு மோசமான உச்சத்தைத் தொட்டது. அந்தப் போட்டியில் அவர் விக்கெட் ஏதுமின்றி 45 ரன்களை வாரி வழங்கியது ஒருபுறம் இருக்க, அவர் வீசிய 3 நோ-பால்கள் கவாஸ்கரை ஆத்திரமடையச் செய்தன.

நேற்றைய ஆட்டத்தின் 14-வது ஓவரை வீசிய பும்ரா, அடுத்தடுத்து 2 நோ-பால்களை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஹிம்மத் சிங்கின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. விக்கெட் வாய்ப்பில் தப்பிய அந்த பேட்ஸ்மேன், அதன் பிறகு அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்தார். இது லக்னோ அணியின் ஸ்கோரை 220 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல உதவியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் கமெண்டரி பாக்ஸில் தனது நிதானத்தை இழந்தார்.
"பும்ரா மீண்டும் நோ-பால் வீசிவிட்டார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் ஒரு புரொபஷனல் கிரிக்கெட்டர். வைடு பந்துகளைக் கூடப் புரிந்து கொள்ளலாம், ஆனால் நோ-பால் வீசுவது அசிங்கமானது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பும்ரா அடுத்தடுத்து நோ-பால்களை வீசியபோது, மும்பை பயிற்சியாளர்கள் மகிலா ஜெயவர்த்தனே மற்றும் மலிங்கா ஆகியோர் தலையில் கைவைத்தபடி செய்வதறியாது நின்றிருந்தது மைதானத்தில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
2026 ஐபிஎல் சீசனில் பும்ரா இதுவரை 8 நோ-பால்களை வீசியுள்ளார். மேலும், 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பும்ராவின் ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் மோசமான சீசனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் மும்பை அணி ரோஹித் சர்மாவின் 84 ரன்கள் மற்றும் ரையன் ரிக்கெல்டனின் 83 ரன்கள் உதவியுடன் 229 ரன்களைத் துரத்தி வெற்றி பெற்றாலும், முதன்மை பந்துவீச்சாளர் பும்ராவின் இந்தச் சரிவு அந்த அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
