IPL 2026: பும்ரா இப்படி சொதப்புவது ஏன்? புட்டுபுட்டு வைத்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பவுலர்
மும்பை: ஐபிஎல் அரங்கில் ஜஸ்பிரித் பும்ரா என்றாலே பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனம் தான். துல்லியமான யார்க்கர், மிரட்டலான வேகம் என எதிரணியை அச்சுறுத்தும் அவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரி வழங்கிய விதம் பேசுபொருள் ஆகி இருக்கிறது. 4 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 54 ரன்களை வாரி வழங்கிய பும்ராவின் இந்தச் சரிவுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களை மும்பை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மிட்செல் மெக்கிளனகன் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 41-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இலக்கை ஹைதராபாத் அணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் அதிரடியில் பும்ராவின் பந்துவீச்சு சுக்குநூறாக உடைந்தது. பும்ரா ஒரு ஓவருக்கு சராசரியாக 13.50 ரன்களைக் கொடுத்தது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 4 முறை கோப்பை வென்ற மிட்செல் மெக்கிளனகன் கூறுகையில், "ஒரு அணியின் மிகச்சிறந்த வீரர் ரன்களை வாரி வழங்கினால், அந்த அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சரிந்துவிடும். பும்ரா போன்ற ஒரு ஜாம்பவானை எதிரணி பேட்டர்கள் துணிச்சலாக எதிர்கொண்டு ரன் எடுக்கும்போது, மைதானத்தில் உள்ள மற்ற வீரர்களின் தோள்கள் தொய்ந்து விடுகின்றன. மைதானத்தில் இருக்கும் உற்சாகம் அப்படியே வடிந்து விடுகிறது. பும்ராவே அடி வாங்குகிறார் என்றால் மற்றவர்களால் என்ன செய்ய முடியும் என்ற ஒருவித உளவியல் ரீதியான அச்சம் வீரர்களிடம் வந்துவிடுகிறது" என்றார்.
மேலும், ஆடுகளத்தின் தன்மையை மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "ஆடுகளத்தில் ஸ்லோயர் பந்துகள் மற்றும் வைடாக வீசப்படும் ஸ்லோயர் பவுன்சர்களை அடிப்பது கடினம் என்று வில் ஜாக்ஸ் கூறியிருந்தார். ஆனால் மும்பை பந்துவீச்சாளர்கள் அதை அதிகம் பயன்படுத்தவில்லை. பனிப்பொழிவு ஒரு காரணமாக இருந்தாலும், பந்துவீச்சுத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாததே இந்தத் தோல்விக்குக் காரணம்" என அவர் விளக்கியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் தோற்றுப் பரிதாப நிலையில் உள்ளது. பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் மும்பை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், வரும் மே 2-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை எதிர்கொள்ள உள்ளது. அதற்குள் 'யார்க்கர் மன்னன்' பும்ரா மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
