IPL 2027: சிஎஸ்கே அணி எந்த வீரர்களை விடுவிக்கனும்? யாரை தக்க வைக்க வேண்டும்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
சென்னை: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவால்ட் பிரேவிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அகீல் ஹொசைன், ஜேமி ஓவர்டன் மற்றும் மேட் ஹென்றி ஆகிய ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான பிரஷாந்த் வீர் மற்றும் மேட் ஷார்ட் ஆகியோரை அணி விடுவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஜேமி ஓவர்டன் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். தோனி இல்லாத நிலையில் கீழ் வரிசையில் களமிறங்கிய அவர், 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 158.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 136 ரன்களும் எடுத்தார்.

அதேபோல், ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன், 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் 123.44 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 337 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், கேப்டன் மற்றும் தொடக்க வீரராக அவரது இடம் உறுதியானது என்று சோப்ரா கூறியுள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் அதிக தொகையாக ரூ.14.20 கோடிக்கு வாங்கப்பட்ட பிரஷாந்த் வீர், 6 போட்டிகளில் விளையாடி 67 பந்துகளில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தார்.மேலும் 2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார்.
வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலை சமர்ப்பிக்க 2026 நவம்பர் 15 கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து, ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று கோவாவில் நடைபெறவுள்ளது. 2028 சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய சைக்கிளில் கடைசி ஏலமாக இது இருக்கும்.
ஐபிஎல் 2026 சீசனில் ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது சீசனாக சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியுள்ளது. இந்த சீசனில் தோனி விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸும் தொடரிலிருந்து விலகினார்.
ஆயுஷ் மத்ரே மற்றும் கலீல் அகமது ஆகியோரும் தொடரின் நடுவில் காயமடைந்தனர். 2021 மற்றும் 2023-ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, 2024-ல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறது.


Click it and Unblock the Notifications


