கங்குலி, யுவராஜைத் தொடர்ந்து இலங்கை ஜாம்பவானை தூக்கிய டெல்லி கேப்பிடல்ஸ்.. பவுலிங் கோச்சாக வாஸ்
டெல்லி: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவை முற்றிலும் புதுப்பித்து வருகிறது. சவுரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியின் புதிய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சமிந்தா வாஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் உறுதி செய்தது. டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலியும், பேட்டிங் மற்றும் உதவிப் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கும் அண்மையில் பொறுப்பேற்றதை அடுத்து தற்போது சமிந்தா வாஸும் இணைந்துள்ளதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சமிந்தா வாஸுக்கு ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இதுவே முதல் அனுபவமாகும். இதற்கு முன்னதாக இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஐபிஎல் தொடரில் வீரராக ஆடிய அனுபவமும் இவருக்குக் கைகொடுக்கும். கடந்த 2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய வாஸ், 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, 2009-ல் தென் ஆப்பிரிக்காவில் கில்கிறிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வென்றதில் வாஸுக்கு முக்கியப் பங்குண்டு.
1994 முதல் 2009 வரை 15 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், 322 ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 6 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான இவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 13 அரைசதங்களுடன் 3,089 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 2,025 ரன்களும் சேர்த்துள்ளார்.
பயிற்சியாளர் நியமனம் மட்டுமின்றி வீரர் பரிமாற்றத்திலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதிரடி காட்டியுள்ளது. குல்தீப் யாதவைக் கொடுத்துவிட்டு, லக்னோ அணியிலிருந்து தங்களது முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட்டை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்துள்ளது. அதேபோல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜனை ஹைதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டு, உத்தரப் பிரதேச சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரியை டெல்லி வாங்கியுள்ளது. முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் டெல்லி அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications


