மும்பை : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சீசனில் வெற்றியே பெறாத மும்பை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஏதேனும் ஒரு அணி புள்ளி கணக்கை தொடங்கிவிடும். இந்தப் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
இதற்காக இரு அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை அணியை பொறுத்தவரை பெங்களூரு, சிஎஸ்கே ஆகிய அணிகளுடன் தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சிக்கல் இருக்கிறது. இதனால் மும்பை அணி பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டி உள்ளது.

மும்பை ரசிகர்களுக்கு திருப்பதி அளிக்கும் விதமாக அந்த அணியின் நட்சத்திர பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று மும்பை அணி பேபி ஏபி டேவில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் பிராவிஸை, பிளேயிங் லெவனுக்கு கொண்டு செல்லலாம்.
மும்பை அணியை விட டெல்லி அணியின் பிரச்சினை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது. வார்னரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் துணை நிற்பது இல்லை. மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா போன்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புகிறார்கள். இது அந்த அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிய 3 ஆட்டங்களிலும் டெல்லி தோல்வியை தழுவி விட்டது. இதனால் முதல் வெற்றியை பெற டெல்லி அணிக்கு தான் கடும் நெருக்கடிக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி ஆடுகளத்தில் கடைசியாக 31 டி20 போட்டியில் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்த அணியே 23 முறை வென்றுள்ளது.