மும்பை: 3வது ஐபிஎல் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இதில் மோதுகின்றன.
பெரும் சர்ச்சையில் சிக்கித் தவித்து வரும் ஐபிஎல்லின் மூன்றாவது டுவென்டி 20 சாம்பியன் தொடர் கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. இன்றும், நாளையும் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்று முதல் அரை இறுதிப் போட்டி மும்பைக்கும், பெங்களூருக்கும் இடையே நடைபெறுகிறது.
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.
புள்ளிகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், 4வது இடத்தில் உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களம் இறங்குகின்றன.
நாளை 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதுவும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இப்போட்டியில் 2வது இடத்தில் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 3வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
தீவிரவாதிகள் போட்டியைக் குறி வைக்கலாம் என ஏற்கனவே மத்திய உள்துறை, மகாராஷ்டிர அரசை எச்சரித்துள்ளதால், பாட்டீல் ஸ்டேடியத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரர்களுக்கும், குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்குப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது.