பெங்களூர்: மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது அரை இறுதி வாய்ப்பை மேலும் மங்கச் செய்துள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், மும்பையும், பெங்களூரும் நேற்று மோதின. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக ஆடி 191 ரன்களைக் குவித்தது.
மெக்லேரன் 40 ரன்களைக் குவித்தார். சச்சின் 19 ரன்களில் திரும்ப, ராயுடு அபாரமாக ஆடி 46 ரன்களை அள்ளினார். பின்னர் வந்த போலார்ட் மின்னலென பாய்ந்து 7 பந்துகளில் 20 ரன்களைக் குவித்து வெளியேறினார். இதில் 3 சிக்சர்களை அவர் தொடர்ந்து விளாசி அசத்தினார்.
டுமினி தன் பங்குக்கு 19 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த மும்பை 191 ரன்களைக் குவித்து விட்டது.
பின்னர் ஆட வந்த பெங்களூருக்கு தொடக்கத்திலிருந்தே சரிவுதான். மனீஷ் பான்டே 16, கல்லிஸ் 14 என வெளியேறினர். கெவின் பீட்டர்சன் சிறப்பாக ஆடி 21 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். டிராவிட் 16 ரன்களில் நடையைக் கட்ட உத்தப்பா 4, ராஸ் டெய்லர் 9 என சுருண்டனர்.
விராத் கோலி மறு முனையில் தனி மனிதராக போராடி 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னணி ஆட்டக்காரர்கள் கைவிடவே பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
பேட்டிங்கில் பிரமிப்பூட்டிய போலார்ட் பந்து வீச்சிலும் அசத்தினார். 3 விக்கெட்களை அவர் வீழ்த்தி பெங்களூருக்கு பெரும் சரிவை ஏற்படுத்தினார். அதேபோல ஹர்பஜன் சிங், பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
நேற்றுடன் பெங்களூருக்கான போட்டிகள் முடிந்து விட்டன. தற்போது அது 14 புள்ளிகளுடன் உள்ளது. அரை இறுதிக்கான வாய்ப்புகள் மிகவும் மங்கியுள்ளன.