ஜாம்பவான்கள் மெக்ராத், முரளிதரனை முந்திய பும்ரா.. டாப் 10 பவுலர்களை தேர்வு செய்த பட்லர், பிராட்
லண்டன்: 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 10 சர்வதேச பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் வெளியிட்டுள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. கிளென் மெக்கிராத் மற்றும் முத்தையா முரளிதரன் என இரண்டு ஜாம்பவான்களை முந்தி இருக்கிறார் பும்ரா.
கிரிக்கெட் தொடர்பான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட், 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த 10 பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்தனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, பும்ராவை 3-வது இடத்திற்கு அவர்கள் தேர்வு செய்து கவுரவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் 1001 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 991 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 243 சர்வதேச போட்டிகளில் 511 விக்கெட்டுகளைக் குவித்து, 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று தந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய ஆடுகளங்களிலும் எதிரணிகளை மிரட்டி விக்கெட் வேட்டை நடத்தும் அவரது அசாத்திய திறமையை இருவரும் வெகுவாகப் பாராட்டினர்.
ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் 4-வது இடத்தையும், பேட் கம்மின்ஸ் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சர்வதேச அளவில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு 6-வது இடமே கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 7-வது இடத்திலும், ககிசோ ரபாடா 8-வது இடத்திலும், ஷான் பொல்லாக் 9-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 10-வது இடத்தைப் பிடித்தார்.
அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ரவீந்திர ஜடேஜா, நாதன் லியோன் போன்ற சுழற்பந்து வீச்சு சாதனையாளர்கள் யாரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications

