IND vs ENG: பிராட்மேன் சாதனையை முறியடித்து மாபெரும் சரித்திரம் படைத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்!
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், நவீன கிரிக்கெட்டின் 'ஃபேப் 4' வீரர்களில் ஒருவருமான ஜோ ரூட், மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு எதிராக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார். மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், கிரிக்கெட் உலகின் பல முக்கிய சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 38வது சதமாகும்.
இந்திய பந்துவீச்சாளர்களை கண்டாலே ஜோ ரூட்டிற்கு தனி உத்வேகம் வந்துவிடும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் அடித்த சதம், இந்திய அணிக்கு எதிராக அவர் அடிக்கும் 12வது சதமாகும். இதன் மூலம் அவர் படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ.

பிராட்மேனை முந்திய ரூட்
டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதுவரை, ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 8 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஜோ ரூட், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தில் தனது 9வது சதத்தை பதிவு செய்து, பிராட்மேனின் 70 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்
- ஜோ ரூட் (இந்தியாவுக்கு எதிராக) - 9 சதங்கள்
- டான் பிராட்மேன் (இங்கிலாந்துக்கு எதிராக) - 8 சதங்கள்
இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள்
இந்த சதத்தின் மூலம், இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 12 சதங்களுடன் ஜோ ரூட் அந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்
- டான் பிராட்மேன் (இங்கிலாந்துக்கு எதிராக) - 19 சதங்கள்
- சுனில் கவாஸ்கர் (வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக) - 13 சதங்கள்
- ஜோ ரூட் (இந்தியாவுக்கு எதிராக) - 12 சதங்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (இங்கிலாந்துக்கு எதிராக) - 12 சதங்கள்
- ஜாக் ஹாப்ஸ் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) - 12 சதங்கள்
சச்சினை நெருங்கும் ரூட்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலின் உச்சத்தில் 51 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் (41) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தற்போது 38 சதங்களுடன் இலங்கையின் குமார் சங்கக்காராவின் சாதனையை சமன் செய்துள்ள ரூட், இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிக டெஸ்ட் சதங்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 51 சதங்கள்
- ஜாக் காலிஸ் - 45 சதங்கள்
- ரிக்கி பாண்டிங் - 41 சதங்கள்
- ஜோ ரூட் - 38 சதங்கள்
- குமார் சங்கக்காரா - 38 சதங்கள்
- ராகுல் டிராவிட் - 36 சதங்கள்
- ஸ்டீவ் ஸ்மித் - 36 சதங்கள்
சொந்த மண்ணில் 'கிங்'
இந்த சதம், இங்கிலாந்து மண்ணில் ஜோ ரூட் அடிக்கும் 23வது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
- ஜோ ரூட் - 23 சதங்கள்
- ரிக்கி பாண்டிங் - 23 சதங்கள்
- ஜாக் காலிஸ் - 23 சதங்கள்
- மகிளா ஜெயவர்த்தனே - 23 சதங்கள்
'ஃபேப் 4'-ல் மீண்டும் முதலிடம்
நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த நான்கு பேட்ஸ்மேன்களான 'ஃபேப் 4' பட்டியலில், ஜோ ரூட் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். 157 போட்டிகளில் 38 சதங்களுடன் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் (36), கேன் வில்லியம்சன் (33), விராட் கோலி (30) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
'ஃபேப் 4' வீரர்கள் அடித்த அதிக டெஸ்ட் சதங்கள்
- ஜோ ரூட் - 38 சதங்கள் (157 போட்டிகள்)
- ஸ்டீவ் ஸ்மித் - 36 சதங்கள் (118 போட்டிகள்)
- கேன் வில்லியம்சன் - 33 சதங்கள் (105 போட்டிகள்)
- விராட் கோலி - 30 சதங்கள் (123 போட்டிகள்)
IND vs ENG: இசான் கிஷன் இல்லை.. ரிஷப் பண்ட்க்கு பதிலாக தமிழக கிரிக்கெட் வீரர் 5வது டெஸ்ட்க்கு தேர்வு
கடந்த 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி
ஜோ ரூட்டின் இந்த அபார வளர்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகால புள்ளிவிவரமே சாட்சி. கடந்த 2021 முதல், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 21 சதங்களை விளாசியுள்ளார். இது அவரது அசுரத்தனமான ஃபார்மையும், ரன் குவிக்கும் திறனையும் காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜோ ரூட்டின் சதங்கள்
- 2021 - 6 சதங்கள்
- 2022 - 5 சதங்கள்
- 2023 - 2 சதங்கள்
- 2024 - 6 சதங்கள்
- 2025 - 2 சதங்கள்
அதிக டெஸ்ட் ரன் சாதனை
சதத்தில் மட்டுமல்ல, ரன் குவிப்பிலும் ஜோ ரூட் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் 120* ரன்களை எட்டியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் 13,378 ரன்களை அவர் கடந்தார். இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலின் முதலிடத்தில் 15,921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்
- ஜோ ரூட் - 13,380 ரன்கள்
- ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்
- ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்
- ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்
- அலஸ்டர் குக் - 12,472 ரன்கள்
- குமார் சங்கக்காரா - 12,400 ரன்கள்
- பிரையன் லாரா - 11,953 ரன்கள்
- சிவ்நரைன் சந்தர்பால் - 11,867 ரன்கள்
- மகிளா ஜெயவர்த்தனே - 11,814 ரன்கள்


Click it and Unblock the Notifications