என்னா அடி.. ஒரே ஓவரில் 28 ரன்கள்.. உம்ரான் மாலிக்கை பொளந்த கேகேஆர் கேப்டன் நிதிஷ் ரானா
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ரானா ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசினார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கே கே ஆர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் ஐதராபாத் அணியின் ஹாரி புருக் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதேபோன்று கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 50 ரன்களும், அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 32 ரன்களும் தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசன் 6 பந்துகளின் 16 ரன்களும் விளாசினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 228 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இதனை அடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் குர்பாஸ் டக் அவுட் ஆக, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோன்று சுனில் நரேன், முன்வரிசையில் களம் இறக்கப்பட்டார்.
ஆனால் அவரும் கோல்டன் டக்கானார். இதனால் கொல்கத்தா அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளேவில் அதிரடியாக விளையாடினால் மட்டுமே இவ்வளவு பெரிய இலக்கை துரத்த வாய்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்த கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியை காட்டினார். ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சை நிதிஷ் ரானா சிதறடித்தார்.

உம்ரான் மாலிக் வேகத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நிதிஷ் ரானா, அதனை பவுண்டரிகளாக மாற்றினார். முதல் பந்தில் ஒரு பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும், அடுத்த மூன்று பந்துகளில் ஹட்ரிக் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்து நிதிஷ் ரானா பதிலடி கொடுத்தார்.
இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் கேகேஆர் அணி 28 ரன்கள் அடித்தது. இதன் மூலம் பவர்பிளேவில் கொல்கத்தா அணி 62 ரன்கள் சேர்த்தது. நடப்பு தொடரில் உம்ரான் மாலிக் ஓரளவு நன்றாகவே பந்து வீசி வருகிறார். மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார். ஆனால் இன்றைய ஆட்டம் அவருக்கு மோசமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications