“ஐபிஎல் கூட முடியல அதற்குள் இப்படியா”.. கே.எல்.ராகுல் எடுத்த பெரும் முடிவு.. வலைவிரித்த பிரபல அணி!
அமீரகம்: பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து அதன் கேப்டன் கே.எல்.ராகுல் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் போட்டிகள் முடிந்து தற்போது ப்ளே ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 குவாலிஃபையர் சுற்றின் மூலம் யார் அடுத்த ஃபைனலிஸ்ட் என்பது தெரியவரும்.

வீரர்கள் அதிருப்தி
இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் பல்வேறு வீரர்கள் வேறு அணிகளுக்கு மாறும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக அணியின் கேப்டன்களே, வேறு அணிக்கு செல்லும் யோசனைகளில் இருப்பதாக தெரிகிறது. டேவிட் வார்னர் ஐதராபாத் அணியில் இருந்து விலகுவதாக மறைமுகமாக அறிவித்துவிட்டார். அதே போல விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார். இந்த வரிசையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்துள்ளார்.

ராகுலின் ஐபிஎல் பயணம்
ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த கே.எல்.ராகுல், கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதன்படி 2 ஆண்டுகள் அந்த அணியின் வீரராக இருந்த கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரின் தலைமையில் இந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றின் அருகில் வரை சென்று பஞ்சாப் அணி வெளியேறியது. இதனால் அவரின் கேப்டன்சி மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

வெளியேறும் ராகுல்
இந்நிலையில் கே.எல்.ராகுல் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் பஞ்சாப் அணியில் இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில் வழக்கமாக ஒவ்வொரு அணிக்கு குறிப்பிட்ட வீரர்களை தக்கவைக்கவும், மீண்டும் அதே வீரர்களை ஏலம் எடுக்கவும் வாய்ப்பு கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை எந்த அளவிற்கு அந்த வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.

வேறு ஒரு அணி பேச்சுவார்த்தை
இப்படிபட்ட சூழலில்தான், கே.எல்.ராகுலை வாங்குவதற்காக அவரிடம் வேறு ஒரு அணி தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதற்கு கே.எல்.ராகுல் சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால் பஞ்சாப் அணியிடமும், தான் வெளியேறுவதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அஸ்வினை கேப்டனாக நியமித்துக் கோப்பையை வெல்ல முடியாத பஞ்சாப் அணி, தற்போது கே.எல்.ராகுலையும் இழந்துள்ளது. எனவே அடுத்த கேப்டனுக்காக தேடலில் அந்த அணி ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications