சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 182 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஆகாஷ் மத்வால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் குர்னல் பாண்டியா, இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர் நாங்கள் இன்றைய ஆட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் நான் ஒரு தவறான ஷாட் ஆடி ஆட்டம் இழந்தேன். அதிலிருந்து தான் எங்கள் அணி சரிவை நோக்கி சென்றது.
அந்த தருணத்தில் நான் அப்படி ஒரு ஷாட் ஆடி இருக்க கூடாது. இதனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பு நான்தான். மும்பை ஆடிய போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்போது மிகவும் தோய்வாக ஆடுகளம் மாறியது. முதல் டைம் அவுட்டுக்கு பிறகு தான் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் இன்று மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம்.
தொடக்க வீரராக குவிண்டன் டி காக்கை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த குர்னல் பாண்டியா ,கேயில் மேயர்ஸ் ,டீ காக்கை விட இங்கு நல்ல ரெகார்ட் வைத்திருப்பதால் அவரை அணியில் சேர்த்தோம். இது நிச்சயம் மிகவும் கடினமான முடிவு தான். ஏனென்றால் குயின்டன் டி காக் உலக தரம் வாய்ந்த வீரர்.
மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடுவார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் தான் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டத்தை தொடங்கினேன் என்று குர்னல் பாண்டியா கூறினார். கேஎல் ராகுல் பாதியில் சென்ற நிலையில் குர்னல் பாண்டியா அணியை வழிநடத்தி பிளே ஆப் சுற்று வரை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.