8 இமாலய சிக்சர்..மும்பை பவுலிங்கை பறக்கவிட்ட ஸ்டோனிஸ்.. தடுமாறிய ரோகித் படை
லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து லக்னோ அணியில், தீபக் ஹூடா தொடக்க வீரராக களமிறங்கினார். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினார்.

மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டிகாக் 16 ரன்களிலும், பிரேராக் மான்கட் டக் அவுட்டாகியும் வெளியேற, லக்னோ அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய குர்னல் பாண்டியாவும், மார்கஸ் ஸ்டோனிசும் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஒரு பக்கம், குர்னல் பாண்டியா மெதுவாக விளையாட, மறுமுனையில், மார்கஸ் ஸ்டோனிஸ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை நிகழ்த்தினார். மும்பை பந்துவீச்சை சுளுக்கு எடுத்த மார்கஸ் ஸ்டோனிஸ், 8 இமாலய சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் ஸ்டோனிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

குர்னல் பாண்டியா 49 ரன்கள் எடுத்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. லக்னோ ஆடுகளத்தில் வெற்றிக்கரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோரே 160 ரன்கள் தான். இதனால் மும்பை அணிக்கு கடும் சவால் காத்துள்ளது.


Click it and Unblock the Notifications