சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான நாக் அவுட் எலிமினேட்டர் போட்டியில் 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடினர். குறிப்பாக, ரோகித் சர்மா ஒரு சிக்சரும், ஒரு பவுண்டரியும் அடித்தார். இஷான் கிஷன் 3 பவுண்டரிகளை அடித்தார்.

எனினும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த இஷான் கிஷன் 15 ரன்களும், ரோகித் சர்மா 11 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேமிரான் கிரீனும், சூர்யகுமாரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இதனால் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ அணி பவுலர்கள் , கட்டுக்கோப்பாக பந்துவீசி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்தனர். சூர்யகுமார் 33 ரன்களும், கேமிரான் கிரீன் 41 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் நேஹல் வெத்ரா 12 பந்தில் 23 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இது நேற்று, சிஎஸ்கே அடித்ததை விட 10 ரன்கள் அதிகமாக இருந்தாலும், இன்று ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. லக்னோ வீரரும், கோலியின் எதிரியுமான நவீன் உல் ஹக் இன்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.