மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் மும்பை அணி வென்றிருப்பதால், நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், கிளாசன் 37 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை அணி தரப்பில் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த நிலையில், 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்சர்களை பறக்கவிட்டார். மீண்டும் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலும் ரோஹித் சர்மா சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரின் 5வது பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் வில் ஜாக்ஸ் - ரிக்கல்டன் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரிக்கல்டன் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க, 6 ஓவர்களில் மும்பை அணி 55 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் ஹர்சல் படேல் பவுலிங்கில் ரிக்கல்டனும் 31 ரன்களில் வெளியேற, சூர்யகுமார் யாதவ் - ஜாக்ஸ் கூட்டணி இணைந்தது. இதில் ஜாக்ஸ் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.
இவருடன் சூர்யகுமார் யாதவும் தனது ஸ்டைலில் சிக்சர்களை பறக்கவிட, 12 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 117 ரன்களாக உயர்ந்தது. அப்போது சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜாக்ஸ் 36 ரன்களில் பெவிலியன் சென்றார். பின்னர் திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா இணை களத்தில் இருக்க, மும்பை வெற்றிக்கு 24 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அப்போது ஹர்திக் பாண்டியா சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். இந்த நிலையில் வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவையாக இருந்த போது, சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த நமன் திர் டக் அவுட்டாகி ஏமாற்ற, வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்களே கொந்தளித்தனர்.
இறுதியாக 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 7 போட்டிகளில் 3 வெற்ரி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 7வது இடத்தில் உள்ளது. மும்பை அணி அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றிருப்பதால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.