பெங்களூரு: 2018ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் போது பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோகித் சர்மா, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலாவது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
16வது ஐபிஎல் தொடரின் மூன்றாம் நாளான இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியில் வென்றதே இல்லை. இதனால் இந்த வரலாற்றை மாற்ற மும்பை அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பெங்களூரு மைதானத்தில் ரோகித் சர்மாவுக்கு சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இதனால் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வீரர் ஆகாஷ் தீப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 10 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. 2018ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 23.8 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 133ஆகவும் இருந்தது. இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 28.9 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 128.54 ஆகவும் இருந்துள்ளது. அதேபோல் 2020ஆம் ஆண்டு ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 27.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.7 ஆகவும், 2021ஆம் ஆண்டு ரோகித்தின் பேட்டிங் சராசரி 29.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 127.4ஆகவும் இருந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 19.1 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 120.1 ஆக மட்டுமே இருந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் மற்றும் 5 முறை கோப்பையை வென்றதால், ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்த விமர்சனங்கள் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த இரு சீசன்களாக மும்பை அணி சொதப்பி வருவதால், ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் பற்றி விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக ரோகித் சர்மா பேட்டிங் செய்யவில்லை என்றாலும் மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் காபாற்றி வந்தனர். ரோகித் சர்மாவும் அவ்வப்போது சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஃபார்மில் உள்ளதாக கூறி வந்தார். ஆனால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா ஃபார்மில் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகளிலாவது ரோகித் சர்மா தனது பேட்டிங்கை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.