பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு பலமான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்தான சந்தேகத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் இரண்டு நாட்களாக கடும் பயிற்சி மேற்கொண்டார். அவர் 100% தற்போது உடல் தகுதி பெற்று விட்டார். நிச்சயமாக அவர் வரும் போட்டிகளில் விளையாடுவார். ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவின்போது அன்றைய நாள் அவர் காலை எழுந்த போது உடல் நிலை சரியில்லை என்று கூறினார்.
அதனால் முன்னெச்சரிக்கையாக ரோகித் சர்மா அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிறைய ஃபோட்டோ ஷூட் பணிகள் எல்லாம் எடுக்க இருந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக பந்து வீசுவார். நேற்று அவர் பயிற்சி செய்யவில்லை. ஆனால் போட்டியில் விளையாடுவார்.

ஜோப்ரா ஆர்ச்சர் உடல் தகுதி முன்னேறிய விதத்தைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த ஆண்டை பற்றி நாங்கள் நினைக்கவில்லை. நான் அப்போது அணியில் இல்லை. எனினும் கடந்த சீசனில் செய்த தவறு குறித்து பேசினோம். இந்த சீசனில் புதிய திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
இந்த தொடரில் நாங்கள் வெற்றியுடன் ஆரம்பிக்க விரும்புகிறோம். நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கூட பதற்றம் அடைய தேவை இல்லை. ஏனென்றால் ஐபிஎல் ஏப்ரல் மாதத்திலோ மார்ச் மாதத்திலோ வெற்றி பெறும் தொடர் கிடையாது.இது மே மாதத்தில் வெற்றி பெறக் கூடியது என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.