மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்முறை அனைவரின் கண்களும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது தான் திரும்பி இருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே அந்த அணியில் உள்ள முக்கிய வீரர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை அந்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அமர வைத்தது தான் பிரச்சனைக்கு முதல் காரணமாக இருந்தது.

இதுவரை ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டதாக செய்திகள் வெளியாகவில்லை. மேலும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் கேப்டன் பதவியில் இருந்து விலகும் ரோஹித் சர்மாவும் இதுவரை எந்த ஒரு நன்றி, வாழ்த்து செய்தியும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம் கடந்த வாரமே தொடங்கிய நிலையில், ரோகித் சர்மா தற்போது தான் வந்து சேர்ந்திருக்கிறார். இது அந்த அணியில் இருக்கும் பிளவை உறுதிப்படுத்துவதாக பலரும் கூறினர். இந்த நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்துவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி நாங்கள் ஒரே குடும்பம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள். வீடியோவில் ஒரு முறை கூட ஹர்திக் பாண்டியாவும் ரோகித் சர்மாவும் இணைந்து இருப்பது போல் காட்சிகள் இடம் பெறவில்லை. ஆனால் அந்த வீடியோ முடிவில் அணியில் உள்ள அனைவரும் இருக்கிறார்கள். அப்போது ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் ஒரு சோபாவில் அமர்ந்திருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அது கிராபிக்ஸ் என்றும் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மாவை தனியாக வீடியோ எடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவுடன் மும்பை அணி இணைத்து விட்டதாக பலரும் புகார் கூறியிருக்கிறார்கள். ஒரு வீடியோவில் கூட இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்றால் எப்படி ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் விளையாடும் என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். எங்கள் அணியில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது சிக்கிக் கொண்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.