லக்னோ: 10 நாட்களாக மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் தனது தந்தை சிகிச்சை பெற்று வந்ததாகவும், லக்னோ அணியின் வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்பதாகவும் அந்த அணியின் மோசின் கான் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மும்பை அணி தரப்பில் டிம் டேவிட் மற்றும் கேமரூன் க்ரீன் களத்தில் இருந்தனர். இந்தப் பக்கம் மோசின் கானிடம் தைரியமாக க்ருனால் பாண்டியா பந்தை கொடுத்தார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் வெறும் 5 ரன்களை மட்டுமே மோசின் கான் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. அதேபோல் புள்ளிப்பட்டியலிலும் 3வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து மோசின் கான் பேசுகையில், நெட்ஸில் என்ன பயிற்சி மேற்கொண்டேனோ, அதனை தான் களத்தில் செயல்படுத்தினேன். க்ருனால் பாண்டியா என்னிடம் பேசும் போதும் அதேயே தான் கூறினேன். கடைசி ஓவருக்காக எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. ஸ்கோர்போர்டை பார்க்கலாமல், கடைசி 6 பந்துகளை வீசிவிட்டு வந்தேன். அதேபோல் முதல் 2 பந்துகளை மித வேகத்தில் வீசினாலும், பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை அறிந்து யார்க்கர்களை அதிகமாக வீசினேன்.
கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின், காயமடைந்த போது சோதனையான காலமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் உடல்நிலை பிரச்சனை காரணமாக ஐடியூ-வில் இருந்த என் தந்தை, 10 நாட்களுக்கு பின் நேற்று தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த ஆட்டத்தை என் தந்தை பார்த்திருப்பார். கடந்த போட்டியில் மோசமான ஆடிய போதும் நம்பிக்கை வைத்து களமிறக்கிய கம்பீர், விஜய் தாஹியா உள்ளிட்டோருக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், விரைவில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட காயத்தால் 9 மாதங்கள் கிரிக்கெட் பக்கமே வரவில்லை. அதன்பின்னர் மீண்டும் உடல்தகுதி பெற்று ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் குறைவாக உள்ள சூழலில், மோசின் கான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.