வரலாறு படைத்த நமீபியா கிரிக்கெட் அணி.. 20 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஒருநாள் தொடர் வெற்றி
வின்ட்ஹோக்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நமீபியா அணி புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஐசிசி முழு நேர உறுப்பினரான அயர்லாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நமீபியா, 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
வின்ட்ஹோக் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடரைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டமாக அமைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நமீபியாவின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேஜே ஸ்மித் தனது அபார பந்துவீச்சால் அயர்லாந்து பேட்டிங் வரிசையை காலி செய்தார். 23-வது ஓவரில் கேப்டன் லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி மிரட்டினார்.

ஜேஜே ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், ஜாக் பிராசல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, அயர்லாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய நமீபியா அணிக்கு லாரன் ஸ்டீன்காம்ப் அதிரடி தொடக்கம் தந்து 44 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.
கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து உதவினார். இறுதியாக 22-வது ஓவரில் ஜேன் கிரீன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் நமீபியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இன்னும் 172 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டியது.
சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் ஆடத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், நமீபியா அணி ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இணைந்து நடத்த உள்ள நமீபியா அணி படைத்துள்ள இந்த வரலாற்று வெற்றி, சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications

