நரேந்திர மோடி மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது வந்த மெயில்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா அண்டர் 19 மற்றும் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. போட்டி முடியும் தருவாயில், காலை 11:00 மணியளவில் மைதான நிர்வாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது.
இதை அடுத்து சைபர் க்ரைம் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மைதானத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மைதானத்தில் தேவையற்ற பதற்றம் உருவாவதைத் தவிர்க்கும் வகையில் வீரர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்தப் போட்டியில் அறிமுக வீரர் தன்மய் பலோடா 14 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, இரு அணி வீரர்களும் மதியம் 1:00 மணியளவில் மைதானத்திலிருந்து பாதுகாப்பாக விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் இந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.
நரேந்திர மோடி மைதானம் மட்டுமின்றி குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் நகரில் உள்ள பல முக்கிய பள்ளிகள், கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் இத்தகைய மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. அந்த இ-மெயிலில் காலிஸ்தான் ஆதரவு கருத்துகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வரும் நவம்பர் 21-ஆம் தேதி இந்த மைதானத்தில் நடைபெற உள்ள பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசாஞ்சின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மிரட்டல் வந்தவுடன் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் படேல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ளன. எனினும், எந்தப் போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவில்லை.


Click it and Unblock the Notifications

