மும்பை : பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரமிடம் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான் என்று பலரும் சொல்வார்கள்.
குறிப்பாக வசீம் அக்கரம் உச்சத்தில் இருந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்திருக்கிறார். வசீம் அக்ரம் எவ்வாறு பந்து வீசினாலும் அதனை சச்சின் லாவகமாக எதிர் கொண்டு ரன்களை அடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சச்சினை பற்றி கடந்த காலத்தில் பல விஷயங்களை நல்லவிதமாக கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அவர் அளித்துள்ள பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக யாரை நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வசிம் அக்ரம், ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விவயன் ரிச்சர்டா தான். அவரிடம் யாரிடமும் இல்லாத பேட்டிங் யுக்தி இருக்கின்றது. பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்றால் அது ரிச்சர்ட்ஸ் தான். நான் பல சிறந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீசி இருக்கின்றேன். ஆனால் அனைவரையும் விட வித்தியாசமானவர் என்றால் அது ரிச்சர்ட்ஸ் தான்.

இந்த தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இதேபோன்று சச்சின் டெண்டுல்கருக்கு நாங்கள் பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசியதில்லை என்று குறிப்பிட்ட வசீம் அக்ரம், 1989 ஆம் ஆண்டு 16 வயது வீரராக சச்சின் பாகிஸ்தான் வந்ததாகவும் அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு தான் சச்சினுக்கு தாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும்பான்மையான காலத்தில் நாங்கள் சச்சினுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசியதில்லை என்பதால் அவர் குறித்து எங்களால் அதிகமாக பேச முடியாது என்று கூறியிருக்கிறார்.