பாகிஸ்தானுக்கு செல்ல பயமா? இங்கிலாந்து அணியிலிருந்து கம்பி நீட்டிய பீட்டர்சன்
மும்பை: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஏன் செல்லவில்லை என்பது குறித்து, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வெறும் ஒஐ வெற்றியை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறி உள்ளது.
இந்த நிலையில், பேட்டிங் ஆலோசகராக அணியில் உள்ள பீட்டர்சன் இந்த தொடரில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி சிலர், பாகிஸ்தானுக்கு செல்ல பீட்டர்சனுக்கு பயமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். தான் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தில் முழுநேர ஊழியர் அல்ல என்றும், ஒரு ஆலோசகராக மட்டுமே செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வந்த நிலையில், பீட்டர்சன் டெல்லியில் நடைபெற்ற டிபி வேர்ல்ட் இந்தியா சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில் கலந்துகொண்டார். இங்கிலாந்து அணியின் மெடணமராக நியமிக்கப்பட்ட பீட்டர்சன், இந்த முக்கியப் பயணத்தில் பங்கேற்காதது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பீட்டர்சன், "இதை ஒருமுறை தெளிவாகக் கூறிவிட விரும்புகிறேன். நான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மட்டுமே, முழுநேர ஊழியர் அல்ல. எனவே, அடுத்த 12 மாதங்களில் வெள்ளைப்பந்து அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் நான் உடன் இருக்கப்போவதில்லை. வரவிருக்கும் திங்கள்கிழமை சில வாரங்கள் அணியுடன் செலவிட ஆஸ்திரேலியா செல்வதில் ஆர்வமாக உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் சிறப்பு வழிகாட்டியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீட்டர்சன் இணைந்தார். இவரது பணிக்காலம் தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை நீடிக்கும். 2013-14 ஆஷஸ் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய பீட்டர்சன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இங்கிலாந்து அணி நிர்வாகத்தில் இணைந்துள்ளார்.
இவரது முதல் பணி இலங்கை தொடரின் போது அமைந்தது. பிரெண்டன் மெக்கல்லம் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்படும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில், மார்கஸ் டிரெஸ்கோதிக், டிம் சவுத்தி, ஜீத்தன் படேல் மற்றும் சாரா கெய்லர் ஆகியோருடன் கெவின் பீட்டர்சனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications


