PAK vs SL: முத்தரப்பு தொடரை 18 ஆண்டுகளுக்கு பிறகு வென்று பாகிஸ்தான் சாதனை.. பைனலில் இலங்கை தோல்வி
லாகூர்: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2008ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் முத்தரப்பு தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 99 பந்துகளில் 127 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதியான அடித்தளம் அமைத்தார். அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த அறிமுக வீரர் சாத் பெய்க், தனது முதலாவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.

நடுவரிசையில் விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், அராபத் மின்ஹாஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அதிரடியாக விளையாடிய அராபத் மின்ஹாஸ் 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார். இறுதியில் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 331 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து அபார வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் சிறப்பான சதமடித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்தனர். இருப்பினும், கடைசி ஓவர்களில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தினர். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருதை வென்ற ஃபகர் ஜமான், தொடரின் முந்தைய போட்டிகளில் சோபிக்கத் தவறிய நிலையில், இந்த முக்கிய போட்டியில் சதமடித்தது திருப்தியளிப்பதாகக் கூறினார். தொடர் நாயகன் விருதைப் பெற்ற இளம் ஆல்ரவுண்டர் அராபத் மின்ஹாஸ், பதற்றமான சூழலில் அமைதியைக் கடைப்பிடித்து விளையாடியதே வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, 2008க்குப் பிறகு முத்தரப்பு தொடரைக் கைப்பற்றியது பெருமையளிப்பதாகவும், இளம் வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறி என்றும் கூறினார். இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ், களத்தில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு மற்றும் 5வது பந்துவீச்சாளரை நிர்வகிப்பதில் உள்ள சவால்களைக் குறிப்பிட்டு, அடுத்தடுத்த தொடர்களில் இத்தவறுகள் சரிசெய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications


