PAK vs SL: நம்ம கிட்டயே தோற்கிறானா, அவன் எவ்வளவு பெரிய மட்டியா இருப்பான்.. பாக்.யிடம் இலங்கை தோல்வி
ராவல்பிண்டி: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், சல்மான் ஆகாவின் அபார சதம் மற்றும் கேப்டன் ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சின் காரணமாக பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சாய்ம் அயூப் 7 ரன்களிலும் மற்றும் ஃபகார் ஜமான் 16 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் இணைந்த அறிமுக வீரர் சாத் பெய்க் 39 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளிக்க, பாபர் அசாம் 45 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தது.

பாபர் அசாம் மற்றும் சாத் பெய்க் ஆகிய இருவரையும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கா அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய சல்மான் ஆகா, நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அவர் ஹசன் நவாஸுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 97 ரன்களும், அரஃபாத் மின்ஹாஸுடன் இணைந்து 64 ரன்களும் சேர்த்தார்.
90 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 107 ரன்கள் குவித்த சல்மான் ஆகா, பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 305 ரன்கள் சேர்க்க உதவினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு 4-வது சதமாகும். இலங்கை தரப்பில் மலிங்கா 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
306 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் கமிந்து மெண்டிஸ் 44 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பவன் ரத்நாயக்க 79 ரன்களும், ஜனித் லியனகே 60 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானுக்கு கடும் சவால் அளித்தனர்.
இருப்பினும், ரத்நாயக்க மற்றும் லியனகே ஆட்டமிழந்த பிறகு இலங்கை அணியின் பின்வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்தது. தசூன் ஷானகா 28 ரன்கள் எடுத்ததைத் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தனது கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 15 ரன்களுக்குள் இழந்து, 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் அசத்திய கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் மற்றும் ஃபஹீம் அஷ்ரப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications


