பாகிஸ்தானின் உலகக்கோப்பை நாடகம் அம்பலம்.. பிரதமரிடம் உண்மையை உடைத்த நக்வி.. வெளியான முக்கிய தகவல்
லாகூர்: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது. வங்கதேச விவகாரத்தைக் காரணம் காட்டித் தொடரைப் புறக்கணிக்கப்போவதாக மிரட்டி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, கடந்த திங்கட்கிழமை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக நக்வி தெரிவித்திருந்தார். தற்போது அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடனான உறவு ஆகியவை எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதே தனது முன்னுரிமை என்று நக்வி பிரதமரிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளார். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
நாடகம்
ஆனால், இதே நக்வி தான் கடந்த இரண்டு நாட்களாக 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை என கூறி வந்தார். ஆனால், பாகிஸ்தான் பிரதமருடன் அவர் பேசும்போது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, பாகிஸ்தான் போட்ட மற்றொரு நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நாடகம் நடக்கக் காரணமே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்றும் அரசு தங்களை ஒரு ஆதிக்க சக்தியாக காட்ட முயற்சிப்பதுதான். வங்கதேச அணி உலகக்கோப்பை ஆட இந்தியா வர மறுத்ததற்கும், பாகிஸ்தான் அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும், வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் விலகப் போவதாக நாடகத்தை நடத்தி வங்கதேச அரசுடன் தாங்கள் நெருக்கமாக இருப்பதை தெரிவிக்கவே இந்த பாகிஸ்தான் உலகக்கோப்பை விலகல் நாடகத்தை நடத்தி இருக்கிறது. ஒருவேளை உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகினால் அது பெரிய அளவில் அந்த அணிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.
புறக்கணிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்றோ அல்லது உலகக்கோப்பையையே புறக்கணிப்போம் என்றோ வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகளே என்று வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தாலும், பொதுவான மைதானங்களில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பதில்லை. அரசியலை விளையாட்டோடு கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் அரசே தொடர்ந்து கூறி வருகிறது. அப்படியிருக்கையில், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தானிடம் எந்த நியாயமான காரணமும் இல்லை" என்று அந்த வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
கொழும்பு பயணம் உறுதி
இதற்கிடையில், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டன. வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் அணி இலங்கையின் கொழும்பு நகருக்குப் புறப்படத் தயாராக உள்ளது. இதற்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications